×

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ஆமை வேகத்தில் மேம்பால பணி: நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்

பல்லாவரம்: பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மேம்பால பணிகள் இதுவரை முடியாமல் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தாம்பரம் மார்க்கமாக இருந்து, சென்னை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதேபோல், கிண்டி மார்க்கத்தில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.

அருகில், சென்னை விமான நிலையம் அமைந்துள்ளதால், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், பல்லாவரம் - பம்மல் சாலை சந்திப்பில் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்ததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் இந்த சிக்னல் பகுதியை கடந்து செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு மேல் ஆவதால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, பல்லாவரம் - பம்மல் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ரூ.82.66 கோடி செலவில், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் மேம்பால பணி தொடங்கியது.

இங்கிலீஷ் எலக்ட்ரிக் சிக்னல், பல்லாவரம் பழைய சந்தை ரோடு, பம்மல் செல்லும் சாலை சந்திப்பு ஆகிய மூன்று சந்திப்புகளை எளிதில் கடந்து செல்லும் வகையில், சுமார் 1.53 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து, கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை மேம்பால பணிகள் முடிக்கப்படாமல் மந்த கதியில் நடைபெற்று வருகிறது. மேம்பால பணிக்காக ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், குறுகிய பாதையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.

மேலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளால், மேலிருந்து இரும்பு கம்பி மற்றும் கட்டை போன்ற கட்டுமான பொருட்கள் கீழே விழுவதால், வாகனங்கள் சேதமடைவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதில் தற்போது பாலம் கட்டுமான பணிகள் வேறு நடைபெற்று வருவதால், வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வாரத்தில் வெள்ளிக்கிழமை என்றால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். வெள்ளிக்கிழமை தோறும் பல்லாவரத்தில் நடக்கும் சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகளை, விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Pallavaram GST Road ,
× RELATED பொது தேர்வுக்கு தயாராகும்...